சுவாமிமலை, மார்ச். 11 –

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், ரூ. 19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய 3 வகுப்பறைகள் மற்றும் புதிய கழிவறைகள் திறந்து வைத்தும் மேலும் 50 மேஜை பெஞ்ச் உள்ளிட்ட அப்பள்ளிக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கும் விழாவென முப்பெரும் விழா நடைபெற்றது.

சுவாமிமலையில் உள்ள இவ் அரசு மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 962 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இங்கு, மாணவர்கள் அமர்ந்து படிக்க இட வசதியில்லாததால், கூடுதல் வகுப்பறைகள் கட்ட பள்ளி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் மாவட்ட வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 2.50 லட்சம், மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய 3 வகுப்பறை கட்டடங்களை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து, கும்பகோணம் பரஸ்பர நிதி லிமிடெட், சார்பில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் 50 மேஜை பெஞ்சை மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான, கல்யாணசுந்தரம் பள்ளியின் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

தொடர்ந்து, பொதுமக்கள் நிதி மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கழிவறை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார் துணைத் தலைவர் சங்கர் செயல் அலுவலர் உஷா ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் பேரூராட்சி செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமையாசிரியர் லால் பகதூர் சாஸ்திரி வழக்கறிஞர் விஜயகுமார் முன்னாள் பேரூராட்சி தலைவர் கேசவன் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரிபயத்துல்லா மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here