புதுடெல்லி :
தங்கள் சொந்த நாட்டில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை மீண்டும் தங்கள் நாட்டுக்கே கொண்டு வந்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவது அந்தந்த நாட்டு அரசுகளுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மேற்படி குற்றவாளிகளை தானாகவே சொந்த நாட்டிடம் ஒப்படைக்க வகை செய்யும் ஒப்பந்தங்களை பல்வேறு நாடுகள் உருவாக்கி உள்ளன. இந்தியாவும் 50 நாடுகளுடன் மேற்படி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு இருக்கிறது. மேலும் 10 நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தப்பி ஓடும் குற்றவாளிகளை தானாகவே சொந்த நாட்டிடம் ஒப்படைக்க வகை செய்யும் ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளுக்கு இடையேயும் உருவாக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சார்பில் டெல்லியில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நாட்டின் வளர்ச்சியை நோக்கியே வியாபாரங்கள் அமைய வேண்டும். வர்த்தகம் செய்வோர் தங்களுக்குள்ளே சுயக்கட்டுப்பாட்டு நெறிமுறையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். நாட்டின் வளர்ச்சியை கெடுப்பதன் மூலம் சிலர் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
குற்றங்களில் ஈடுபட்டு தப்பி ஓடுபவர்கள், சட்டத்தை எதிர்கொள்வதற்கு பதிலாக, தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள். எது அச்சுறுத்தல்? நீங்கள்தான் (தப்பி ஓடும் குற்றவாளிகள்) நாட்டுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறீர்கள். மற்றவர்கள் எதிர்கொள்வதை போல நீங்களும் நாட்டுக்கு திரும்பி வந்து சட்ட நடவடிக்கைகளை ஏன் எதிர்கொள்ளக்கூடாது?
இத்தகைய குற்றவாளிகளை தானாகவே ஒப்படைக்க வகை செய்யும் ஒப்பந்தத்தை ஒவ்வொரு நாடும் பிற நாடுகளுக்கு இடையே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். விசாரணை நிறுவனங்களால் தேடப்படும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.
இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்ற தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். எனினும் வெங்கையா நாயுடு, தனது உரையில் இவர்களில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.