தரைப்பாலம் அமைக்க தனியார் ஒப்பந்ததாரர் சாலை பராமரிப்பு பணி விதிகளை மேற் கொள்ளாமல், அலட்சியப் போக்குடன் பணியை மேற் கொண்டதால், இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஆபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நிலையில், மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, ஆக 6 –
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதிக் குட்பட்ட பொன்மார் ஊராட்சியில் பொன்மார் – தாழம்பூரை இணைக்கும் சாலையில் தரைப் பாலம் அமைக்கும் பணி நடைப் பெற்று வருகிறது.
இந்த பணியின் போது காண்ராக்டர் வேலை அறிவிப்பு பலகை, தடுப்பு வலை மற்றும் வாகன ஒட்டிகள், பாதசாரிகளுக்கு எச்சரிக்கையை உணர்த்தும் வகையில் சிகப்பு வண்ணத்திலான கொடி போன்ற போதிய பாதுகாப்பு நிலையை செய்யாமல் அஜாக்கிரதையாக பணியை மேற் கொண்டதால், கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இன்ப குமார் என்பவர் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது பள்ளத்தில் தவறி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்து வமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அதுக் குறித்து அவருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தும் அதற்கான பொறுப்பான பதிலை அளிக்காததும், மேலும் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமலும் பணியை தொடர்ந்து அலட்சியப் போக்குடன் செய்து வருவதால். மேலும் இதுப் போன்ற ஆபத்துகள் ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டி, அப்பகுதி மக்கள் அதனை எதிர்த்தும், காயமுற்று கவலைக் கிடமான வகையில் சிகிச்சைப் பெற்று வரும் இன்ப குமாருக்கு நீதி வேண்டியும், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மேடவாக்கம்-மாம்பாக்கம் பிரதான சாலை பொன்மாரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்கு வரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அவர்களை கலைய செய்தனர்.