திருவண்ணாமலை மார்ச்.17-
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிவனின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு சிவன் மலையாக எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். எனவே திருவண்ணாமலை வரும் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக 2 ஆண்டுகளாக பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படவில்லை இதனால் வேதனையடைந்த பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கிரிவலம் செல்ல அனுமதிக்க வேண்டும். என கோரிக்கை விடுத்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு ஆன்மீக அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது, கொரோனா பரவல் முற்றிலும் குறைந்துள்ள நிலையில் பங்குனி மாத பவுர்ணமி நாட்களான இன்று 17ந் தேதி (வியாழக்கிழமை) மதியம் 1.44 மணிக்கு தொடங்கி நாளை 18ந்தேதி (வெள்ளிகிழமை) மதியம் 1.27 வரை பவுர்ணமி ஆகும். இதனால் வியாழக்கிழமை இரவு கிரிவலம் வர உகந்தநேரம் ஆகும் எனவே பக்தர்கள் முகக்கவசம் அணிந்து கிரிவலம் செல்லலாம் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்றும் நாளையும் திருவண்ணாமலை 14 கி.மீ. கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கிரிவல பாதையில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ஏ.எஸ்.லட்சுமி ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ஊராட்சி செயலாளர்கள் தூய்மை பணியாளர்களை கொண்டு ஆனாய்பிறந்தான் அத்தியந்தல் அடிஅண்ணாமலை வேங்கிக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கிரிவல பாதையில் அமைந்துள்ள கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியும், தூய்மை காவலர்களுடன் துப்புரவு பணி முடிக்கிவிடப் பட்டுள்ளது.