கும்பகோணம், ஜன. 3 –
கும்பகோணம் அருகே உள்ள சன்னாபுரம் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் இருந்த 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையால் சேதமடைந்ததால் அரசுக்கு ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள சன்னாபுரம் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன, கொள்முதல் பணியாளர்கள் கவனிக்காமல் விட்டுவிட்டதால் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மற்றும் சாக்குகள் சேதமாகியும் அரசுக்கு சுமார் 1 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகங்களிலும் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் விளைவித்த நெல்லை, தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு 7.50 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு பருவத்தில் அக்.1 முதல் 10.54 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. இதையடுத்து 2021 அக்டோபர் முதல் நவம்பர் வரை வரை சுமார் 3 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் அனைத்தையும் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள தனியார் அரவை மில்லுக்கு அனுப்பி, அந்த அரிசியை பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த குறுவை சாகுபடி பருவத்தில் 350 கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மாவட்டத்தில் உள்ள 5 நிரந்தர சேமிப்பு கிடங்குகள் மற்றும் 24 திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டது. அனைத்து சேமிப்புக் கிடங்குகளில் நெல்மூட்டைகள் அதிக அளவில் இருந்ததால், ஒரு சில கொள்முதல் நிலையங்களில் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டன.
இதற்கிடையில் கும்பகோணம் அருகே சன்னாபுரத்தில் உள்ள திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் இருந்த சுமார் 10 ஆயிரம் டன் எடையுள்ள, சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும், நெல் சாக்குகள் சேதமாகியும், நெல்மணிகள் கீழே கொட்டியும் வீணாகி வருகின்றன. அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவித்த நெல், சேமிப்புக் கிடங்குகளில் சேதமடைந்தும், முளைத்து வீணாகி வருவதைப் பார்த்து விவசாயிகள் வேதனை அடைகின்றனர். விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்து, கவனிப்பாறின்றி அலட்சியமாக இருந்ததால் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமாகியுள்ளன. இதனை இப்பகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசு தலைமை கொறடாவுக்கு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் இதனால் அரசுக்கு சுமார் 1 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் பிற பகுதிகளில் சேமிக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.