காஞ்சிபுரம், ஜன. 3 –
காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்குட்பட்ட 14 காவல்நிலையங்களில் உள்ள எவரும் உரிமைகோரப்படாத 1,817 இருசக்கர வாகனங்கள், 15 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 26 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,858 வாகனங்கள் உள்ளன.
இந்த வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடித்து வாகனங்களை ஒப்படைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் M.சுதாகர் உத்தரவின் படி வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க இயலவில்லை என்பதாலும், வாகனத்தை எவரும் உரிமை கோரவில்லை என்பதாலும் தொடர்ந்து காவல்நிலையங்களில் இருப்பில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காவல் நிலையங்களில் உள்ள உரிமை கோரப்படாத வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை இயக்குநர் அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், வாகனங்களை ஏலம் விடப்பட்டு அதன் மூலம் வரும் தொகையினை அரசு கணக்கில் செலுத்த ஏதுவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மேற்படி உரிமை கோரப்படாத 1,858 வாகனங்கள் குறித்து எவரும் உரிமை கோராததால் நாளை வரும் 04.01.2022 அன்று காலை 10.00 மணி முதல் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாகனங்கள் மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்ட குழுவினரால் ஏலம் விடப்படவிருக்கிறது.
இந்த ஏலத்தில் பங்குபெற இருப்போர் தவறாது கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இரு சக்கர வாகனத்திற்கு அரசு விற்பனை வரி 12 % மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 % உடனடியாக செலுத்திவிட வேண்டும்
இந்த ஏலத்தில் பங்குபெறவிருப்போர் தவறாது தங்களது ஆதார் கார்டு அசல் மற்றும் நகலை உடன் கொண்டு வரவேண்டும் என காஞ்சிபுரம் மாவட்டகாவல்துறை அறிவித்துள்ளது.





















