கும்பகோணம், டிச. 27 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 22,23,24, ஆகிய மூன்று வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் என்ற சிறப்புத்திட்ட முகாம் அம் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் தலைமையில் நடைப்பெற்றது. அம்முகாமில் மக்களிடம் இருந்து 100 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
“மக்களுடன் முதல்வர்” என்ற சிறப்புத் திட்டத்தை கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அச்சிறப்பு திட்டம் நடைப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மாநகரில் உள்ள தனியார் மகாலில் அம் மாநகராட்சிக்குட்பட்ட 22,23,24, ஆகிய மூன்று வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்ட முகாம் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், தலைமையில் நடைபெற்றது. அதில் மேயர் சரவணன், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், மாமன்ற உறுப்பினர்கள் தீபா சரவணன், மனோகரன், ரூபினிஷா அலெக்ஸ், கலந்து கொண்டனர்.
மேலும் அதில் பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை, மின்சாரத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறை என 13 ற்கும் மேற்பட்ட அத்துறைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று தனித்தனி ஸ்டால் அமைத்திருந்தனர்.
அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் அத்துறைச் சார்ந்த இணையத்தில் பதிவிடப் பட்டது. மேலும் அச்சிறப்பு முகாமில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது 30 தினங்களுக்கு மிகையாகமல் நடவடிக்கை மேற்கொண்டு தீர்வுக் காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





















