காஞ்சிபுரம், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பல்வேறு கடைகளில் நடத்திய சோதனையில் ரூ1.26 லட்சம் மதிப்பிலான குட்கா போதைப்பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வாலாஜாபாத் பகுதியில் பல்வேறு இடங்களில் கடைகளில் குட்கா விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் படி வாலாஜாபாத் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் சோதனை செய்த பொழுது மூன்றுக்கும் மேற்பட்ட கடைகளில் ரூ.1.26 லட்சம் மதிப்பில் 4200 குட்கா பாக்கெட் மூட்டை கட்டி வைத்திருப்பதை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு போலீசார் சோதனையில் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த உபைதுல்லா(32) என்பவரை கைது செய்தனர். மேலும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட மூன்று கடைகளுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.






















