முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் கன மழைத் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப்பணிக் குறித்து நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் நமக்கல் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலமாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

சென்னை, அக். 17 –

இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாட்டில் பெய்து வரும் கன மழை தொடர்பாக மேற் கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் குறித்து  நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளிக் காட்சி மூலமாக ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.

முன்னதாக கடந்த செப்.24 ஆம் தேதியன்று முதலமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப்பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைப் பெற்றது அக்கூட்டத்தில் விரிவான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அக்டபோர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில்  தமிழ்நாட்டிற்கு 448 மி.மீ மழை இயல்பாக கிடைக்கிறது. இது தமிழ்நாட்டின் வருடாந்திர இயல்பான மழை அளவில் 47.32 விழுக்காடாகும். வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவதோடு தொடர்புடைய சில பகுதிகளில் கன மழை முதல் மிக கனமழை ஏற்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இந்த பருவமழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அக்-16 அன்று குறிப்பாக கன்னியாகுமரி நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி தேனி, தென்காசி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சராசரி மழை அளவைவிட அதீத கனமழை மற்றும் மிக கனமழை பெய்துள்ளது.

இந்த கனமழையால் கடந்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 குடிசைகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 2 நபர்களும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 நபரும் உயிரிழந்துள்ளனர் என அரசுத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 நிவாரண மையங்களில் 116 குடும்பங்களைச் சேர்ந்த 337 நபர்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 திருநெல்வேலி மாவட்டம் திருகுருங்குடி மலையில் உள்ள நம்பி கோயிலுக்கு வழிபட சென்ற 500 பக்தர்கள் மலைப்பகுதியில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக நம்பியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினைத் தொடர்ந்து கோயிலிருந்து வர இயலாத நிலையில் வருவாய்த் துறை , காவல்துறை, மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை உதவியுடன் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. இது மட்டுமல்லாது இந்த மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளுமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொடர்ந்து மாவட்ட அளவில் பருவமழை காலத்தின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அளிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின் பற்றுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் அக் – 17 முதல் 20.10.2021 வரை பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மழை சேதங்கள் குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர்களுடன் நடைப் பெற்ற காணொளிக் காட்சி ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அடுத்து வரும் மழைக்காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தேவைப்படும் இடங்களில் நிவராண முகாம்கள் அமைத்து அம்முகாம்களில் தங்க வைக்கப்படும் பொது மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும், அத்தியாவசியப் பொருட்கள் தங்குத் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடவும் அறிவுரைகளை இக்கூட்டத்தின் வாயிலாக முதலமைச்சர் வழங்கினார். முகாம்களில் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவைப்படும் பால், ரொட்டி, உணவு, மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடவும், மழைக் காலங்களில் தொற்று வியாதிகள் டெங்கு போன்றவை பரவாமல் இருக்கவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதிக்கப்படாத வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யவும், அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்திடவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப் பட்டது.

மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்கவும், முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கட்டுப்பட்டின் கீழ் சென்னை சேப்பக்கத்தில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. உதவி தேவைப்படும் பொதுமக்கள் 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் நிருவாக ஆணையர் க. பணீந்நிர ரெட்டி, பொதுத் துறை செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், காணொளிக் காட்சி வாயிலாக நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவயா, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் வே. விஷ்ணு, நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here