பொன்னேரி, டிச. 08 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டாரம் என்பது விவசாயம் நிறைந்த பகுதியாகும். மேலும் அதனை நம்பி அப்பகுதியில் 80 விழுக்காடு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் அதனைச் சார்ந்த மக்கள் ஆடு, கோழி, மாடு போன்றவைகளை வளர்த்தும் தொழில் செய்தும் தங்கள் வாழ்விற்கான பொருளாதாரத்தினை ஈட்டி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் விளை நிலத்தில் பல்வேறு பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருவது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் பலத்த சூறைக்காற்றும் இடைவிடாது பெய்து வந்த கனமழையாலும், ஆரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீரால் ஏரிகள் உடைபட்டு அப்பகுதியில் வாழும் மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் வரலாறு காணாத அளவிற்கு வெள்ள நீர் புகுந்தது.
அதனால் கிராம மக்கள் உயிர் பிழைக்க மேடான பகுதிகளுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். ஆனாலும் கால்நடைகள் பெருமளவில் அவ்வெள்ளப் பெருக்கில் பாதிப்புக்குள்ளானது. பழவேற்காடு அருகே உள்ள பிரளயம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட போலாச்சி அம்மன் குளம் கிராமமே நீரில் மூழ்கியதால் சுமார் 30 க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகின நூற்றுக்கணக்கான மாடுகள் கோமாரி நோய்க்கு ஆளாகியுள்ளதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மண்டல இணை இயக்குனர் சைத்துன் மற்றும் திருவள்ளூர் நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் கால்நடை பராமரிப்பு துறையினர் முகாமிட்டு கால்நடைகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இம் முகாமில் பொன்னேரி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் திருஞானம், கால்நடை உதவி மருத்துவர்கள் அனிதா, சித்ரா, ஆர்த்தி, கால்நடை நோய் புலனாய் பிரிவு கால்நடை உதவி மருத்துவர் செல்வ பிரியா, இலவச கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி கால்நடை உதவி மருத்துவர் ஜனனி, கால்நடை ஆய்வாளர்கள் மணிமேகலை, பிரபாவதி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் தனசேகர், முருகன், செல்வகுமாரி, ஜெயந்தி, ஆறுமுகம் உள்ளிட்டோர் முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.





















