அரசின் வளர்ச்சி பணிகளுக்கு நிலங்கள் தேவைப்படுவதால், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் மீட்கும் பணி தொடரும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
சென்னை, செப். 18 –
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் ஜேப்பியார் கல்வி குழுமத்திற்க்கு சொந்தமான சத்தியபாமா பொறியியல் கல்லூரி மற்றும் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரிகள் சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான 91.04 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பாக கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தினை மீட்க வருவாய்த்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க முயற்சித்து வந்த நிலையில் , இது சம்பந்தமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வருவாய் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலங்களை மீட்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ், செங்கல்பட்டு ஆட்சியர், சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை பார்வையிட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர், தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலங்களை மீட்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதனடிப் படையில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆக்கிரமிப்பு மற்றும் அவை தொடர்பான நீதிமன்ற வழக்குகள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு விரைவாக ஆக்கிரமிப்புகள் மீட்கப்படும் என தெரிவித்தார். மேலும், அரசின் வளர்ச்சி பணிகளுக்கு நிலங்கள் தேவைப்படுவதால், நிலங்கள் மீட்கும் பணி தொடரும் எனவும் அவர் கூறினார்.