கும்பகோணம், மார்ச். 27 –
கும்பகோணம் சென்னை சாலையில் அமைந்துள்ள கொரநாட்டுக்கருப்பூரில், சோழ மன்னர்களின் ஆட்சியில் கிபி 1188 முதல் 1216 ஆண்டுகளில் அமைக்கப்பெற்ற அழகிய கற்கோயில் சுந்தரேஸ்வரசுவாமி திருக்கோயிலாகும்.
மேலும், இத்தல விருட்ஷம் பாதிரி மரம் ஆகும். ஒரு சமயத்தில் கும்பகோணம் பகுதியில் பௌண்டரீக யாகம் செய்த போது அதில் இருந்து அமுதத்துளிகள் 10 மைல் தொலைவில் உள்ள 5 இடங்களில் விழுந்துள்ளது அவை தாராசுரம், திருநாகேஸ்வரம், திருவிடைமருதூர், சுவாமிமலை மற்றும் கொரநாட்டு கருப்பூர் ஆகிய இடங்களாகும்.
எனவே இவ்விடங்கள் பஞ்ச குரோசத்தலங்கள் என போற்றப்படுகிறது இத்தகைய சிறப்பு பெற்ற தலத்தில் பிரம்மன், இந்திரன், குபேரன் உள்ளிட்ட தேவர்களும், அகத்தியர், சுரதன் உள்ளிட் முனிவர்களும் வழிப்பட்டு தங்கள் சாப விமோசனம் பெற்றுள்ளனர்.
மேலும், இங்குள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என போற்றப்படுகிறது இதில் நீராடினால் பல யாகங்கள் செய்த பலன்களை உண்டு என்பது ஜதீகம்
மேலும், இக்கொரநாட்டுக்கருப்பூரில் உள்ள காவிரியாற்றில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மரப்பெட்டி மிதந்து வந்ததாகவும், அதனை அவ்வூர் மக்கள் திறந்து பார்த்த போது அதில் படுத்த நிலையில் உக்கிரமான வடிவில் 2 கோரைப்பற்கள், அஷ்ட புஜங்களுடனான காளிதேவியின் மார்பளவு மரச்சிலை இருந்துள்ளதாகவும், மேலும் அவரது வலது புஜத்தில் சூலம், அரிவாள், உடுக்கை, கிளி ஆகியவையும், இடது புஜத்தில் பாசம், கேடயம், மணி, கபாலமும் கொண்டிருந்ததாகவம் இத்திருத்தல வரலாறு தெரிவிக்கிறது.
மேலும், அச்சிலையினை மறைந்த காஞ்சி மகாப்பெரியவர் சந்திரசேகரந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாசிப்படி இக்காளியை சுந்தரமாகாளி என பெயற்சூட்டி தனிப்பெட்டியில் வைத்து சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோயில் தனி சன்னதியில் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அன்று முதல் இக்காளி சுந்தரமாகாளி என்றும் பெட்டிக்காளி என்றும் பக்தியோடு பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது.
இத்தகைய பிரசித்தி பெற்ற தலத்தில், நூறு ஆண்டுகளுக்கு முன் வைகாசி விசாக விழாவில் ஓடிய இம்மரத்தேர் காலப்போக்கில் சிதலமடைந்து, விழா நின்று போன நிலையில், தற்போது சென்னையை சேர்ந்த உபயதாரர் மகாலட்சுமி சுப்பிரமணியன், ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக இக்கோயிலுக்காக, 16 அடி உயரம், 14 அகலம் அலங்கரிக்கப்பட்ட நிலையில் 37 அடி உயரத்தில், 24 டன் எடையில் புதிய தேர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பணி நிறைவுப்பெற்றதை தொடர்ந்து அத்திருத்தேரின் வெள்ளோட்டத்தினை முன்னிட்டு, நேற்று, யாகசாலை பூஜைகள் தொடங்கி, இன்று 2ம் கால யாக சாலை பூஜை நிறைவில், மகா பூர்ணாஹ_தியும், மகா தீபாராதனையும் நடைபெற்ற பின்னர், நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க, சியாமளா யானை முன் செல்ல, கடங்கள் புறப்பாடு நடைபெற்றது, பின்னர் ஒரு கடத்தை தேரில் ஸ்தாபித்தும், மற்றொரு கடத்தில் இருந்த நீரைக் கொண்டு தேருக்கு அபிஷேகம் செய்வித்து, சிறப்பு பூஜை செய்து தீபாராதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, தருமர ஆதீன குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் சூர்யனார்கோயில் ஆதீன குருமகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் இணைந்து கொடியசைக்க, தேர் வெள்ளோட்டம் சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றக்கணக்கானோர் ஆர்வமாக கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுந்து மகிழ்ந்தனர்






















