கும்பகோணம், செப். 06 –
கும்பகோணத்தில் பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேள னத்தின் சார்பில் கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குஜராத் மாநிலத்தில் பில்கிஸ் பானு என்ற இஸ்லாமிய பெண்னை கூட்டு பாலியல் குற்றமிழைத்த பதினோரு குற்றவாளிகள் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கண்ட 11 குற்றவாளிகளும் குஜராத் அரசால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். போஸ்கோ சட்டத்தில் குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மேற்கண்ட கைதிகளுக்கு சிறை சிறப்பு விதிகள் பொருந்தாது என்ற நிலையில், குஜராத் அரசாங்கம் இந்த 11 குற்றவாளிகளையும் சிறையிலிருந்து விடுவித்தது செல்லாது.
ஆகவே மேற்கண்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து மீண்டும் சிறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று கும்பகோணத்தில் பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும். நன்னடத்தை விதிகளின்படி விடுதலை செய்ததை ரத்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம், கோட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் டி.கண்ணகி, தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் தாமரைச்செல்வி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ராஜலட்சுமி, கண்ணகி, சரண்யா, பரிமளா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை மனுவை அளித்தனர்.