சுவாமிமலை, ஏப். 08 –
ஸ்ரீமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் பங்குனி பெருவிழாவினை முன்னிட்டு நேற்றுக் காலை வள்ளி கல்யாணத்தின் ஒருபகுதியாக, அரசலாற்றங்கரையில் யானை விரட்டல் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சண்முகசுவாமியை தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
தமிழ் கடவுள் என போற்றப்படும் அருள்மிகு திருமுருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை அருள்மிகு திருசுவாமிநாதசுவாமி திருக்கோயில் ஆகும். மேலும் இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருவிழாவில் வள்ளி கல்யாணம் நடைபெறும்.
வேடர்குல அரசர் நம்பிராஜன் வளர்ப்பு மகளான வள்ளி, தினைபுனம் காவல் புரியும் போது, அவள் அழகை கண்ட நாரத முனிவர் அதனை முருகப்பெருமானிடம் தெரிவிக்க, வள்ளியின் அழகில் மயங்கிய முருகர் அவரை மணம் புரிந்திட கிழவர் வேடம் தாங்கி களைப்பாக இருப்பதாக கூறி, வள்ளியிடம் தேனும் தினைமாவும் பருகிய பின், தாகம் என கூறி அருகில் இருந்த சுனைக்கு வள்ளியை அழைத்து செல்வதும், அங்கு வள்ளியை மணம் புரிவதாக முருகப்பெருமான் கூற, அக்கிழவர் வேடம் புரிந்திருந்த முருகனின் குறும்பில் வள்ளி கோபிப்பதும், தொடர்ந்து முருகன், விநாயகரை வணங்கி அவரைத்துதிக்க விநாயகர் அப்போது யானையாக உருவம் மாறி வந்து, ஸ்ரீவள்ளியை விரட்ட, மிரண்ட வள்ளி, முருகனை பயத்தில் அணைத்துக் கொள்கிறார்.
அதனைத்தொடர்ந்து முருகன் தனது சுயரூபத்தை ஸ்ரீவள்ளியிடம் காட்டியவுடன், அங்கு ஸ்ரீ வள்ளியின் வளர்ப்பு தந்தை நம்பிராஜன், வள்ளியை முருகனுக்கு மணம் முடித்து வைக்கிறார் என்பது இத்திருதலத்தின் வரலாறு தெரிவிக்கிறது.
மேலும் இந்நிகழ்வில், நேற்று அதிகாலை சுவாமிமலை அரசலாற்றில், தினைபுனம் காத்த வள்ளியை விநாயகப்பெருமான் யானை உருவத்தில் வந்து விரட்டும் காட்சியும், பின் முருகப்பெருமான் சுய ரூபத்தில் காட்சி அளித்தலும் நிகழ்த்தி காட்டப்பட்டது இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசுவாமியையும் ஸ்ரீவள்ளியையும் கண்டு தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.























