திருவாரூர், சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ஆருர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாமா, ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணசுவாமி பெருமாள் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது..
முன்னதாக ஆலயத்தில் பாலாலயம் நடைபெற்றதை தொடர்ந்து ஆலயம் புதுப்பிக்கப்பட்டு திருப்பணி நடைபெற்றது.. கடந்த 22.01.24 திங்கள் கிழமை அன்று விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில், யாக சாலையில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு கணபதி ஹோமம் மற்றும் ஆறு கால யாக பூஜைகள் நடைபெற்றது.
நேற்று முன்தினம் ஆறாம் கால யாக பூஜை பூர்த்தியானதைத் தொடர்ந்து பூர்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, மேலதாளங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து கோபுரங்களை சென்றடைந்தது.. அதனை தொடர்ந்து சரியாக காலை பத்து மணி அளவில் கோபுர கலசங்களுக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது.. அதன் பின் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அம்மையப்பன் பகுதி மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கோபுரம் மற்றும் சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.






















