திருவாரூர், செப். 15 –

திருவாரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளில் பல கோடி முறைகேடு நடைபெற்ற வழக்கில், சாலைகளி்ன் தரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் புதிய பேருந்து நிலையம், ரூ.6.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள், மிதிவண்டி நிறுத்தகம் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் ஆகியவற்றில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கடந்த 2020 ஆம் ஆண்டு கிடைத்துள்ளது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முறைகேடு தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தினர்

இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 2021 ஏப்ரல் மாதம் ஒப்பந்ததாரர் முருகவேல் மற்றும் நகராட்சி முன்னாள் ஆணையர்கள் உமாமகேஸ்வரி, காந்திராஜ், முன்னாள் பொறியாளர்கள் பாலகங்காதரன், ஜோதிமணி, பணி மேற்பார்வையாளர் வெங்கடேசன், நாகராஜன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி நந்தகோபால் மற்றும் நெடுஞ்சாலைத்துறை தர மதிப்பீடு கோட்ட பொறியாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் முதல் கட்டமாக திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தின் சாலையின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. இதற்கு சாலையில் குழிகள் ஏற்படுத்தப்பட்டு, அதிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அப்போது விதிமுறைகளை பின்பற்றி ஜல்லி கற்கள், மணல் வகையில் பயன்படுத்தப்பட்டனவா என ஆய்வு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து மேலும் மற்றொரு நாளில் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள், மிதிவண்டி நிலையம் ஆய்வு செய்யப்படவுள்ளது. ஆய்வுகளுக்கு பிறகு சமர்ப்பிக்கப்படும் அறிக்கையைக் கொண்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here