மீஞ்சூர், ஜூலை. 08 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு பகுதியான அரியன்வாயலில், நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினசரி கூலி வேலைக்கு சென்று தங்கள் வாழ்வாதரத்தை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் தனியார் டிராக்டர் மூலம் வரும் தண்ணீரை குடத்திற்கு ரூ. 7 விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளதாகவும், அதுவும் சில நேரங்களில் கிடைக்காத நிலையில் ரூ. 30 கொடுத்து, தண்ணீர் கேன் வாங்கும் நிலையும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதனால் மாதம் தோறும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ. 2 ஆயிரம் வரை செலவு ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதனால் தங்கள் குடும்ப வருமானபற்றாக்குறையால் மிகவும் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரும் எவ்விதப் பயன்பாட்டிற்கும் பயன் படாத நிலையும் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அதனால் மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட அரியன் வாயல் 2 வது வார்டு பகுதியான அபுல்கலாம் ஆசாத் மூன்று தெருக்கள், ஜெயலட்சுமி நகர், கணேஷ் நகர், இளங்கோ நகர், சண்முகபுரம், ஜெகன் நகர், திருப்பதி நகர், தங்கவேல் புரம், என பத்துக்கும் மேற்பட்ட நகர்களில் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் மக்கள் நீண்ட நாட்களாக இப்பிரச்சினைக்குறித்து மன்ற உறுப்பினர் அபுபக்கரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக இப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத்தர வலியுறுத்தி, இன்று இவ்வார்டு உறுப்பினரான அபுபக்கர் மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனுவினை வழங்கி, அம்மனுவின் மீது விரைவு மற்றும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்போது செயல் அலுவலரிடம் கேட்டுக்கொண்டார்.






















