திருவண்ணாமலை பிப்.11-
திருவண்ணாமலை மணலூர்பேட்டை செல்லும் சாலையிலுள்ள காப்புக்காடு பகுதியில் வழிபறி மற்றும் கத்தியைக் காட்டி மர்ம நபரகள் தாலி சங்கிலி மற்றும் பணம் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் தச்சம்பட்டு காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் தொடர் வழிபறியில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளை கைது செய்யாமல் மெத்தனமாக இருக்கும் காவல்துறையை கண்டித்து பாவுப்பட்டு காட்டாம்பூண்டி பறையம்பட்டு பழையனூர் நரியாபட்டு தச்சம்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தச்சம்பட்டு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தச்சம்பட்டு காவல்நிலையத்தை முற்றுகையிட வந்த பொதுமக்களை காவல்நிலையத்திற்குள் செல்லவிடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு பாவுப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டனை வழிமறித்து மர்ம கும்பல் அவரது கழுத்தில் கத்தியை வைத்து ரூ.60ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் இரவு நேரங்களில் காவல்துறையினர் காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும். காப்புக்காடு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.






















