திருவண்ணாமலை செப்.1-
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பழங்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மத்திய அரசு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் தூய்மையான பாரதம், தூய்மையான பள்ளி திட்டத்தின் கீழ் சுகாதாரம் மிக்க அரசுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிவறைகள், சோப்புடன் கூடிய கை கழுவும் வசதி, பராமரித்தல், நடத்தை மற்றும் திறன் உயர்த்துதல் ஆகிய தலைப்புகளில் மதிப்பீடு செய்யப்பட்டு தேசிய அளவில் 172 சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் 25 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 25 பள்ளிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் தாலுகாவிற்குட்பட்ட பழங்கோவில் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயக்குமார், கூறுகையில், ‘தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி திட்டத்தின்கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் அருகே உள்ள பழங்கோவில் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாதிரி பள்ளி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இன்று 1ம் தேதி டெல்லியில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் பள்ளியின் சார்பில் பள்ளியின் தலைமை ஆசிரியரும். பள்ளி மாணவி ஒருவரும் பங்கேற்று விருதினை பெற உள்ளனர்’ என்றார்.