புதுடெல்லி:
இ.பி.எப். என்று அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, நடப்பு நிதி ஆண்டில் (2018-19) 8.65 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார், டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
இதுபற்றி மேலும் அவர் கூறும்போது, “நடப்பு நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு கூடுதல் வட்டி வழங்க, இ.பி.எப். நிறுவனத்தின் மத்திய அறங்காவலர் வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒப்புக்கொண்டனர்” என குறிப்பிட்டார். இந்த ஒப்புதல், இனி மத்திய நிதி அமைச்சகத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும். நிதி அமைச்சகம் அனுமதி அளித்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவாக 2017-18 நிதி ஆண்டில் 8.55 சதவீத வட்டி மட்டுமே வழங்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.