கும்பகோணம், ஆக. 16 –
பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்துக்களை தெருவித்த சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அதனைக் கண்டித்து இந்து அமைப்புக்களை சேர்ந்தவர்கள் இன்று கும்பகோணத்தில் காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது இந்து அமைப்புகளை சேர்ந்த 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியார் சிலை குறித்து, சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் சமூகத்தில் பதட்டத்தையும், அமைதி கெடும் வகையிலும், தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த கனல் கண்ணனை புதுச்சேரியில் கைது செய்தனர். இந்த நடவடிக்கையை கண்டித்து இன்று நண்பகல், தலைமை அஞ்சலகம் முன்பு இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர், காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்திட 20க்கும் மேற்பட்டவர்கள் மகாமக குளம் அருகேயுள்ள வீரசைவ பெரிய மடம் முன்பு கூடியிருந்த போது அவர்கள் அனைவரையும், தடுத்து நிறுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில், மேற்கு காவல்துறை ஆய்வாளர் பேபி மற்றும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்கள் அனைவரையும் அங்கிருந்து அப்புறப் படுத்தும் விதமாக இரு வேன்களில் ஏற்றி சென்றனர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் தமிழக அரசை கண்டித்தும், கைது சம்பவத்தை கண்டித்தும் கண்டன முழங்களை எழுப்பினர், இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.