கோவை:
கோவை வெள்ளலூர் எல்.ஜி.நகரை சேர்ந்தவர் நிர்மர்குமார். இவர் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் சிவில் சப்ளை பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 17-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு, நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 26 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கோவை ஒத்தகால்மண்டபம் வேலந்தாவளம் ரோடு பகுதியை சேர்ந்தவர் குட்டியப்பன்(வயது 59). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். மறுநாள் திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 9 பவுன் நகை மற்றும் டி.வி. உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் ஆட்கள் இல்லாததை கண்காணித்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அந்த பகுயில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என பட்டியல் சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் திருட்டு நடந்த வீடுகளின் அருகே உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.