கோவை:

தஞ்சாவூரை சேர்ந்தவர் பாலாஜி(வயது 22). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் இஸ்கான் கோவில் சாலையில் இருந்து ஜென்னி கிளப் பகுதியை நோக்கி வந்தார். கொடிசியா சாலையில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பாலாஜி படுகாயமடைந்தார். அவர் மீது மோதிய கார் நிற்காமல் மீண்டும் அதிவேகமாக சென்று விட்டது. படுகாயமடைந்த பாலாஜியை பொதுமக்கள் மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவரது மகள் தர்சனா ரூத்(21) என்பது தெரிய வந்தது. தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர் தனது தோழியுடன் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த பாலாஜியின் தந்தை கார்த்திகேயன் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மாணவி தர்சனா ரூத் மீது அதிவேகமாக காரை ஓட்டுதல், விபத்தில் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here