புதுடெல்லி:
இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. பத்ம விபூஷண் 4 பேருக்கும், பத்ம பூஷண் 14 பேருக்கும், பத்ம ஸ்ரீ 94 பேருக்கும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் முதல்கட்டமாக இன்று 56 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், மதுரை சின்னப்பிள்ளை, மருத்துவர் ரமணி, மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி, டிரம்ஸ் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பங்காரு அடிகளார், சரத் கமல், டிரம்ஸ் சிவமணி ஆகியோர் இன்று ஜனாதிபதியிடம் பத்ம ஸ்ரீ விருது பெற்றனர்.
இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் மோடி பங்கேற்றனர்.