மீஞ்சூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
இன்று மீஞ்சூர்-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இளம் பெண் பலியானர். அதனால் கொதித்தெழுந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை எனும் இடத்தில் மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் இரு புறத்திற்கும் நடுவே தடுப்பு சுவருக்கு பதிலாக சிமெண்ட் கற்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கனரக வாகனங்கள் அதிகமாக வருகின்ற காரணத்தினால் நடுவினில் தடுப்பு கற்கள் வைக்கப்பட்டு ஒரு பக்கம் கனரக வாகனங்களும் மற்றொரு பக்கம் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களும் சென்று வர ஏதுவாக தடுப்பு கற்கள் வைக்கப்பட்டது.
ஆனால் அதுவே பல உயிர்கள் பலி வாங்குவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வைக்கப்பட்ட இந்த தடுப்பு சுவரில் மோதி இதுவரை 5 பேருக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளதாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.
தடுப்பு சுவர் ஓரமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவ்வழியே செல்லும் கனரக வாகனங்களை முந்தி செல்லும் போதோ அல்லது கனரக வாகனங்கள் வரும் போது ஒதுங்கி செல்லும் போதோ சாலை விஸ்தரிப்பாக இல்லாத காரணத்தினால் தடுப்பு சுவர் மீது வாகன ஓட்டிகள் மோதி பலியாவது தொடர்ந்து தொடர் கதையாகி வருவதாக மேலும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று மீஞ்சூர் அருகே உள்ள சுப்பா ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுகுமார் என்பவரின் 25 வயதான அவரது இளம் மனைவி பூரணம் எனும் பூரனேஸ்வரி இருசக்கர வாகனத்தில் செல்லும் போது லாரி மோதியதில் அவர் தடுப்பு சுவரில் மோதி பலத்த காயமுற்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கொண்டக்கரை பகுதி மக்கள் அவரை காப்பாற்ற மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பூரனேஸ்வரி உயிரிழந்துள்ளார். அதனால் கொதித்து எழுந்த கொண்டக்கரை மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதனால் வாகனங்கள் அப்பகுதியில் சுமார் நான்கு கிலோமீட்டர் அளவிற்கு அணிவகுத்து நின்றது. அத்தகவலறிந்து அங்கு வந்த மெயின் டோர் காவல் துறை ஆய்வாளர் காளிராஜ் மாவட்ட போக்குவரத்து ஆய்வாளர் சோபிதாஸ் உள்ளிட்ட காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் பொதுமக்கள் இறந்த நபருக்கு நீதி கேட்டு வெகு நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஆவடி சரக காவல் ஆணையரக துணை ஆனையர் பாலகிருஷ்ணன் விரைந்து வந்து பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அவரிடம் அப்பகுதி மக்கள் தொடர்ந்து இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்வதால் தடுப்புச் சுவர்களை அகற்றி பாதுகாப்பான முறையில் மாற்று ஏற்பாடுகளை எடுத்து பொதுமக்கள் சென்று வர வழிவகை செய்ய வேண்டும் என அப்போது அவரிடம் கோரிக்கை விடுத்தனர். அதைக் கேட்டு அறிந்தவர் தடுப்பு சுவராக அமைக்கப்பட்ட கற்களை அகற்றி விடுவதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
அதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. பேருந்து பயணிகள் பெரும் அவதிக்குள்ளானர்கள்.
























