சென்னை:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தவர் முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர் கடந்த 15-ந்தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பதற்கான ஆதாரங்களை பத்திரிகையாளர் முன்னிலையில் அவர் வெளியிட்டார்.

இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முகிலன் தெரிவித்திருந்தார்.

பத்திரிகையாளர் சந்திப்புக்கு பிறகு அன்றிரவு மதுரை செல்வதற்காக எழும்பூர் ரெயில் நிலையம் சென்றார். இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் தொலைபேசியில் பேசி உள்ளார். ஆனால் அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

இதுவரை அவரை கண்டு பிடிக்க முடியாததால் எழும்பூர் ரெயில்வே போலீசில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

முகிலன் கடத்தப்பட்டதாக அச்சப்படுவதாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு சம்பந்தப்பட்டவர்கள் அல்லது போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து துன்புறுத்தலாம் என்று சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

எனவே முகிலனை கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இதற்கிடையே, காணாமல் போன முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் மற்றும் காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளிக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட ஐகோர்ட், இவ்வழக்கின் மறுவிசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின்போதும் இதே முகிலன் மற்றும் சதீஷ் ஆகியோர் திடீரென மாயமானார்கள். பின்னர் 3 நாட்கள் கழித்து முகிலனை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள் என்பது நினைவிருக்கலாம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here