மயிலாடுதுறை, மார்ச். 19 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்

மழிலாடுதுறை மாவட்டம், தங்குதடையின்றி நல்லத்துக்குடி ஓம்சக்தி நகரில் கள்ளச் சாரயம் விற்பனையாகும் காட்சிகள் வாட்ஸ்அப்பில் வைரலான நிலையில், சாராய விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒரு சாராய வியாபாரி வெளியூருக்கு தப்பி சென்றதாக தகவல் தெரிய வருகிறது. மேலும் அப்பகுதியில் காவல்துறையினர் தொடர் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், இருப்பினும் போலீசார் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டையும் மீறி மயிலாடுதுறையில் சட்டத்திற்கு புறம்பாக பாண்டி சாராய விற்பனை அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி மற்றும் பயன் பாடற்ற ரயில்வே பாதை, பல்லவராய்ப்பேட்டை, திருஇந்தளூர், பொட்டவெளி, கிட்டப்பா பாலம் அருகே காவிரி கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்படும் பாண்டி சாரயம் பாண்டி ஐஸ் என்ற பெயரில் பிளாஸ்டிக் பாக்கெட்களில் விற்கப்படுகிறது.

நல்லத்துக்குடி ஓம்சக்தி நகரில் மணிகண்டன் என்பவர் பாண்டி சாரயம் விற்பனை செய்வதாக வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மதுவிலக்கு போலீசார் ஓம்சக்தி நகரில் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட மயிலாடுதுறை மேல ஒத்தசரகு பகுதியை சேர்ந்த தேவா என்பவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

ஆனால் சாராய வியாபாரி மணிகண்டன் என்பவர் வெளியூர் தப்பிச் சென்று விட்டதால் அவரைக் கைது செய்ய முடியவில்லை என்று மதுவிலக்கு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் சாராய விற்பனை தொடர்பாக காட்சிகள் வெளியானால் மட்டுமே நடவடிக்கை எடுக்கும் காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து காரைக்கால் கள்ள சாராயத்தை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று அப்பகுதி வாழ் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here