மயிலாடுதுறை, பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை அருகே போதை பொருளுக்கு எதிராக மாணவர்கள் 3 மணிநேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி போதை இல்லா சமுதாய விழிப்புணர்வு உலக சாதனை படைத்தனர். மதுவிலக்கு அமலாக்க துறை போலீசாருடன் மாணவர்கள் போதைபொருளுக்கு எதிராக உறுதிமொழியேற்பு. சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மூவலூர் மகாதானபுரத்தில் நோபல் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் விக்ரம் வீர தமிழர் சிலம்பாட்ட கழகம் சார்பில் போதை இல்லா சமுதாய விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்வாக மாணவ மாணவிகள் மூன்று மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.
நோபல் புக் ஆப் ரெக்கார்ட் நடுவர் விக்ரம் முன்னிலையில் ஆறு வயது முதல் 20 வயது வரை உள்ள 34 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிலம்பத்தில் உள்ள சலாம், உள்வாரல், வெளிவாரல், தலைசுத்து, போத்து, ஒற்றை வீச்சு, இரட்டை வீச்சு, கமுட்டு, அடிவரிசை, போன்ற முறைகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுகளை தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றினர்.
நிகழ்வில் போதைப் பொருளுக்கு எதிராக காவல்துறை சார்பில் ஒளிபரப்பப்பட்ட ஆடியோ பாடலுக்கு ஏற்றவாறு சிலம்பம் சுற்றியது பார்வையாளர்களின் பாராட்டை பெற்றது. இதில் காவல்துறையினர், பெற்றொர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
நோபல் புக் ஆப் ரெக்கார்ட் போதைக்கு எதிரான விழிப்புணர்வு சிலம்பாட்ட நிகழ்வை உலக சாதனையாக பதிவு செய்தது. தொடர்ந்து மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் அன்னை அபிராமி தலைமையில் மாணவர்கள் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். பின்னர் சிறப்பு அழைப்பாளர் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் பதக்கங்கள் கேடயம் சான்றிதழ்களை போன்றவற்றை மாணாக்கர்களுக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.





















