தஞ்சாவூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சையில் நகை வியாபாரியை வழிமறித்து தாக்கி, அவர் மீது மிளகாய் பொடி தூவி 7 கிலோ வெள்ளி ஆபரணங்களை கொள்ளையடித்து சென்ற வழக்கில் சிசி டிவி காட்சிகள் அடிப்படையில் ஒரு சிறுவன் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 7 கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கடந்த 8 ம் தேதி இரவு தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் ஹாதாராம் என்ற நகை வியாபாரி இரு சக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்று கொண்டு இருந்தார். அவரை இரண்டு இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த கும்பல் ஹாதாராம் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதுகின்றனர்.
இதில் ஹாதாராம் நிலை தடுமாறி கீழே விழுந்த உடன் அவரை தாக்கி, அவர் மீது மிளகாய் பொடி தூவி ஹாதாராம் வைத்து இருந்த 7 கிலோ வெள்ளி நகைகளை வைத்து இருந்த பையை பறித்து தப்பி ஓடி விட்டனர்..
இதுக்குறித்து ஹாதாராம தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தஞ்சையில் நகை வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கொள்ளை நடந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் கொள்ளையர்கள் விட்டு சென்ற இரு சக்கர வாகனம், மொபைல் போன் இவற்றை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் திருச்சியை சேர்ந்த மணிகண்டன் (27), கும்பகோணத்தை சேர்ந்த சரவணன் (28), தீனா (21), கரன் (26). அலெக்ஸ் (16), ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்களில் அலெக்ஸ் மைனர் ஆவார்.
மேலும் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 7 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களில் மணிகண்டன், கரன் இவர்கள் இருவரும் கடந்த 2021ம் ஆண்டு டி.பழூரில் நடந்த வழக்கறிஞர்.சாமிநாதன் கொலை வழக்கில் தொடர்பு உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இக்கொள்ளை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.





















