கும்கோணம், மார்ச். 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள ஆடுதுறையில் இன்று மறைந்த முன்னாள் அமைச்சர் கோ சி மணியின் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. அதில் சூர்யனார் கோயில் ஆதீனம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கோ சி மணியின் மகன் கோசி இளங்கோவன் உள்ளிட்ட திமுக முக்கிய பிரமுகர்கள் பலரும் ஒட்டு மொத்தமாக புறக்கணித்த நிலையில், ஆசானுக்கான மணிமண்டபம் என்பதற்காக, முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணம், கோ சி மணியின் பேரன் மரு. திருமாவளவன் உள்ளிட்ட சிலர் விதிவிலக்காக பங்கேற்றனர்.

ஆடுதுறையில் மறைந்த மூத்த திமுக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் தமிழக அமைச்சருமான கோ.சி.மணிக்கு, பெருமை சேர்க்கும் வகையில், பேரூராட்சி சார்பில், ரூபாய் 72.50 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 6 ஆயிரம் சதுர அடி மனையில், 1,250 சதுர அடியில் மணிமண்டபத்துடன் கூடிய நூலகம், பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றுடன் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று பேரூராட்சி தலைவர் ம க ஸ்டாலின் (பாமக) தலைமையில் நடைபெற்றது.

மேலும் அவ்விழாவில் சூர்யனார்கோயில் ஆதீன குருமகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், கந்தபரம்பரை வாமதேவ சந்தானம், பேரூராட்சி துணை தலைவர் கமலா சேகர், மயிலாடுதுறை ஜெகவீரபாண்டியன், திருவிடைமருதூர் வட்டார ஜமா அத்துல் உலமா சபை தலைவர் அப்துல்லாஹ்மிஸ்பாகி, கிருஸ்துவ அருட்தந்தை அந்தோணிசாமி சின்னப்பா, தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி ஆர் லோகநாதன், பாஜக தலைவர் சதீஷ்குமார், மாநகர செயலாளர் பொன்ராஜ் தேவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில செயலாளர் ஷாஜகான், பாமக மாநில துணை தலைவர் அய்யப்பன்,  வன்னியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என திரளானவர்கள் அவ்விழாவில் கலந்து கொண்டனர்.

ஆனால் அவ்விழாவில் திமுக முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் இதில் பங்கேற்க முறைப்படி அழைத்திருந்த போதும், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினரும், கோசிமணியின் மகனுமான கோசி இளங்கோவன் உள்ளிட்ட திமுக முக்கிய பிரமுகர்களான தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான எஸ் கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை எம்.பி., செ இராமலிங்கம், அரசு தலைமை கொறடா கோவி செழியன், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயரும், மாநகர செயலாளருமான சு ப தமிழழகன் உள்ளிட்ட பலரும் ஒட்டு மொத்தமாக அவ்விழாவிற்கு செல்லாமல் புறக்கணித்தனர். இருப்பினும் விதிவிலக்காக திமுக முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணம், உள்ளிட்ட ஒருசில திமுகவினர் மட்டும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

அம் மணி மண்டப பணிகள் யாவும் முழுமையாக நிறைவுப் பெற்று, எதிர் வரும் ஜூன் மாதம் 03 ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதியின் பிறந்தநாளின் போது திறக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் தெரிய வருகிறது.

திமுக முக்கிய பிரமுகர்கள் பெரும்பாலானோர் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தது, இந்த பணியை பாமக பிரமுகரான பேரூராட்சி தலைவரான ம.க. ஸ்டாலின் முன்னின்று நடத்துவதால், இந்த நல்ல பெயர் அவருக்கு கிடைத்து விடுமோ என்ற அச்சத்திலும், திமுக முன்னணி தலைவருக்கு, பாமக நிர்வாகி மணிமண்டபம் அமைப்பதா என்ற நோக்கிலும் இதில் பங்கேற்காமல் புறகணித்ததாக அரசல் புரசலான பேச்சுக்களும் உலா வருகிறது. இந்த அடிக்கல் நாட்டு விழாவினை புறக்கணித்தது மூலம், சோழ மண்டல காவலர், சோழ மண்டல தளபதி என போற்றப்படும் கோ.சி.மணியினை  அவமதித்ததாகும் என அப்பகுதி பொதுமக்கள் பலரும் புலம்புவதாக காற்றோடு கலந்து வரும் செய்தியாகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here