கும்பகோணம், பிப். 29 –
தம்பட்ட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம்,திருவிடைமருதூர் தாலுகா,திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் அருகேவுள்ள நெய்குன்னம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி, அவருக்கு சொந்தமான வைக்கோல் கட்டுகளுக்கு கடந்த 16ம் தேதி மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்து விட்டு, அவரது வீட்டின் சுவரில் ‘தெடரும்’ என பிழையாகவும், அதனை தொடரும் என மீண்டும் திருத்தம் செய்து விட்டு சென்றுள்ளனர்.
அது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காக திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக், தொடரும் என முடியும் வாக்கியங்களாக கேள்விகளை தயார் செய்து அவர்களை தேர்வு எழுத வைத்துள்ளார். அதில், சுவரில் எழுதப் பட்டிருந்ததைப் போன்று தெடரும் என பிழையாக எழுதிய ஜெயபிரகாஷ் என்ற நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர்தான் வைக்கோல் கட்டுகளுக்கு தீ வைத்திருப்பது தெரிய வந்தது.
மேலும் அதற்கான காரணம் குறித்து தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கு விளம்பரம் தேடுக் கொள்ளவும் மேலும் எங்கள் ஊர் பரபரப்பாக பேசப்பட வேண்டும். என்பதற்காகவும் வைக்கோல் கட்டுகளுக்கு தீ வைத்து தொடரும் என்று எழுதி வைத்து விட்டு சென்றதாக காவல்துறையினரின் விசாரணையில் கூறியுள்ளார்.
அதனையே வாக்குமூலமாக கொண்டு ஜெயபிரகாஷ் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அவருடைய நண்பர் பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்து திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். அதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.