திருவாரூர், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
கங்கையை விட புண்ணியமிக்க தீர்த்தமாக விளங்கக்கூடிய திருவாரூர், தியாகராஜர் ஆலய, ஸ்ரீகமலாலயத் திருக்குளமானது தேவர்களும், நாயன்மார்களும் நீராடிய தொன்மை வாய்ந்த திருக்குளமாகும்.
திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயம், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது.. ஆலயம் 5 வேலி நிலப்பரப்பிலும், கமலாலய தீர்த்த குளம் 5 வேலி நிலப்பரப்பிலும் பரந்துவிரிந்து காணப்படுகிறது.
குளத்தின் 4 கரைகளிலும் 64 தீர்த்த ஸ்நான கட்டங்களில் பல்வேறு தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றன.
பல சிறப்புகளைக் கொண்ட இத்தகைய புண்ணிய கமலாய தீர்த்த குளத்தில் தினசரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் யாத்தீரியர்கள் புனித நீராடி ஸ்ரீ தியாகராஜரை வழிபடுகின்றனர்.
இதுதவிர திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினசரி குளத்தில் குளிக்க பயன்படுத்தி வருகின்றனர். வற்றாத புண்ணிய தீர்த்த குளமாக இருந்து வரும் கமலாயத் திருக்குளம், திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.
இது போன்ற தொன்மை சிறப்புகளைக் கொண்ட இப்புண்ணிய தீர்த்தத்தில் திருவாரூர் நகராட்சி நிர்வாகத்தின் பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து வெளியேறும் மலக்கழிவு நீர் கலந்து வருகிறது.
குறிப்பாக குளத்தின் வடகரை பகுதியில் உள்ள பாதாளசாக்கடை தொட்டியில் இருந்து வெளியேறும் மலக் கழிவுநீர் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடி குளத்தின் பக்கவாட்டில் உள்ள கரை வழியாக குளத்தில் கலந்து வருகிறது.
இது குறித்து குளத்தின் தென்கரையில் உள்ள திருவாரூர் நகராட்சி நிர்வாகத்தின் கண் எதிரே இத்தகைய பாதாள சாக்கடை மலக் கழிவுநீர் குளத்தில் கலந்து வருவது தெரிய வந்தும், கண்டு கொள்ளாமல் நகராட்சி நிர்வாகம் இருந்து வருகிறது.
மேலும், கமலாலய வடகரை சாலை.. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்லக்கூடிய திருவாரூரின் பிரதான சாலையாக விளங்கி வருகிறது..
இந்த நிலையில், நகராட்சி நிர்வாகத்தின் இத்தகைய அலட்சிய போக்கால் தினசரி குளத்தில் உட்புகும் மலக்கழிவு நீரினால் புனித நீராடும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மட்டுமின்றி திருவாரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிக்க பயன்படுத்தி வரும் நிலையில் தொற்றுநோய் பரவும் அபாயம் எழுந்துள்ளதோடு, பல்வேறு தோல் நோய்களால் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது..
இதனால் பக்தர்கள், பொதுமக்கள்.. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.





















