அண்ணலக்ரஹாரம், சனவரி. 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ….

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள அண்ணலக்ரஹாரம் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்தரும் வீரமுத்து மாரியம்மன் ஆலயத்தில் பேராயிரம் பரவி வானோரேத்தும் பெம்மானாகிய கண்ணுதல் பெருமானுடைய பெரும் கருணையினால் முத்திசையும் புனற்பொன்னி சூழ்ந்து தனது புனற் கரங்களால் ஆரத்தழுவி வளங்கொழிக்கும் காவினங்கள் செய்து உழவு முப்பொழுதும் நடத்தி உலகத்தின் பசி தீர்க்கும் நீர் நாடாம் சோழ பெருவள நாட்டில் காவிரியின் கிளை நதியா அரிசில் ஆறு தென்கரையில் கயிலாய மலைத்தலைவன் கண்ணுதல் பெருமானின் ஒரு பாகமாக அமைந்த உமையம்மையின் கருணைப் பேறாக விளங்கிய அருள் தரும் வீர முத்து மாரியம்மன் ஆலயம் பல வருடங்களாக பகுதி வாழ் மக்களை வளம் பொங்க வாழ வைத்து  கொண்டிருக்கும் வீரமுத்து மாரியம்மன், வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் சக்தியாக விளக்கும் இம்மாரியம்மன் ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்திட திட்டமிட்டு, ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 22ம் தேதி திங்கட்கிழமை யாகசாலை பூஜைகள் விநாயகர் வேள்வி, கரி‌க்கோலம் மற்றும் அம்மனுக்கு சீர்வரிசை புறப்பாடு, நிலதேவர் வழிபாடு, மற்றும் விக்னேஷ்வர பூஜை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை,  நடைபெற்று, காவிரியாற்றில் இருந்து கலசங்களில் புனிதநீர் கொண்டு வரப்பட்டு கும்ப அலங்காரத்துடன் யாகசாலை பிரவேசம் நடைபெற்று முதல்கால யாக பூஜைகள் தொடங்கியது.

தொடர்ந்து 23ம் தேதி செவ்வாய்க்கிழமை இருவேளை யாகசாலை பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து இன்று 24ம் தேதி புதன்கிழமை 4ம் கால யாகசாலை பூஜை பூர்ணாஹதியுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டு, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, பூ மாரி பொழிய கடங்கள் புறப்பாடும் அதனை அடுத்து, விமான கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் திருக்குட அருள் நன்னீராட்டு பெருவிழா என்னும் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து, மூலவர் வீரமுத்து மாரியம்மனுக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், விழா குழுவினர், கிராமவாசிகள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அருசுவை உணவு பரிமாறப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here