சென்னையில் தனியாக காரில் அமர்ந்து பேசும் காதலர்களை குறி வைத்து பல ஆண்டுகளாக பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்த ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சசிகுமாரை வேளச்சேரி போலீசார் கைது செய்தனர்.
செய்தி சேகரிப்பு இ.சி.ஆர். பா.வினோத் கண்ணன்
சென்னை, ஆக. 31 –
சென்னை வேளச்சேரியில் தனியார் கால் டாக்சி ஓட்டுநர் ஜோசப் என்பவரை மிரட்டி ஒருவர் பணம் பறித்து சென்றதாக வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த வேளச்சேரி போலீசார் பணம் பறிப்பில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.
பின்பு அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த போது அவர் சசிகுமார் என்பதும் அவர் ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. .
விசாரணையில் ஓய்வு பெற்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் என்பதை கேட்ட போலீசார் காவல் துறையில் பணியாற்றிய நபரே இது போன்ற செயலில் ஈடுபட்டத்தை அறிந்து மேற்கொண்டு தங்கள் விசாரணையை துவங்கினர்.
விசாரணையில் காதலர்கள் தனியாக காரில் அமர்ந்து பேசும் போது பணியில் இருக்கும் அந்த பகுதி போலீசார் போன்று தன்னை காட்டிக் கொண்டு அவர்களின் பெற்றோர்களுக்கு போன் செய்யும் படி மிரட்டி அவர்களை காவல் நிலையம் வாருங்கள் என்று அழைத்து மிரட்டி பணம் பறித்ததும், தனியாக மது அருந்துபவர்களை நோட்டமிட்டு அவர்களிடம் தன்னை பணியில் இருக்கும் போலீஸ் என கூறிக் கொண்டு மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த குற்றச் செயல்கள் குறிப்பாக சென்னை பெசன்ட்நகர், வேளேச்சேரி, ஆலந்தூர், நங்கநல்லூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காதல் ஜோடிகள், சாலையில் காரில் அமர்ந்து மது குடிப்பவர்களிடம், தனியாக இருக்கும் கால்டாக்சி ஓட்டுநர்களிடம் தொடர்ந்து பணம் பறித்து வந்துள்ளார்.
பின்னர் ஓய்வும்பெற்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சசிகுமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்பொழுது அவருக்கு இதயத்தில் பிரச்சனை உள்ளதாக மருத்துவர்களிடம் சசிகுமார் கூறியுள்ளார்.
மருத்துவர்கள் சசிகுமாரை பரிசோதித்த பின்பு அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறியதாக தெரிவித்தனர். முதலுதவி அளித்த பின்பு ஓய்வு பெற்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சசிகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சசிகுமாரின் மருத்துவ பரிசோதனையை பார்த்த மாவட்ட நீதிபதி அவரை சிறையில் அடைக்க வேண்டாம் என்று கூறியதால் வேளச்சேரி போலீசார் காவல் நிலைய பினையில் அவரை விடுவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இச் செயல் காவல்துறை வட்டாரத்தில் சல சலப்பை உருவாக்கியுள்ளது.