திருவாரூர், டிச. 09 –

திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் ஊராட்சி பகுதியில் கடந்த 6 மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாததால், அவ்வூராட்சி அலுவலகம் முன்பு குப்பை கொட்டும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 1800 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் அவ்வூராட்சியின் தலைவராக கஸ்தூரி வரதராஜன் என்பவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில் திருவாரூர் நாகை நெடுஞ்சாலையில் அக் கிராமத்திற்கான குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் எரிக்கப்படுவதால் கிராம மக்கள் மாற்று இடத்தில் குப்பையை கொட்டுமாறு கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களாக கிராமம் முழுவதும் குப்பை அள்ளப்படாமல் சாலைகளிலேயே தேங்கியுள்ளது.

அதனைக் கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை அப்பகுதி கிராம மக்கள் நடத்திய போதிலும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையையும் அவ்வூராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அவ்வூராட்சி அலுவலகம் முன்பாக குப்பை கொட்டும் போராட்டத்தில் கிராம மக்கள் இன்றைய தினம் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தை கலைப்பதற்கு வழி தெரியாமல் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தலைமையில் ஒரு பிரிவினர் திருவாரூர் நாகை நெடுஞ்சாலையில்  குப்பை கொட்டும் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனால் அவ்வூராட்சிக்குட்பட்ட பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடையே சுமூக பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

அதுக் குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்..

ஆறு மாதங்களாக இவ்வூராட்சிக்குட்பட்ட பகுதியில் குப்பை அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது, பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும் ஆளாகி வருவதாக தெரிவித்தனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here