திருவண்ணாமலை, டிச. 3 –
திருவண்ணாமலையில் தீபத்திருவிழா உற்சவத்தின் 6 ஆம் நாளான நேற்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது. தினமும் காலையிலும் இரவிலும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வருகின்றனர்.
மகாதீபபெருவிழாவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது. தினசரி காலை, இரவு என உற்சவ மூர்த்திகள் பவனி வருகின்றனர். அதன்படி தீபத் திருவிழாவின் 5ம் நாள் உற்சவமான வியாழனன்று இரவு திருக்கல்யாண மண்டபத்தில் ராஜகோபுரம் எதிரில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.
வண்ண மின்விளக்கு அலங்காரம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்ட வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையாரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி மாடவீதியில் பவனி வந்தனர்.
இந்நிலையில் உற்சவத்தின் 6ம் நாளான நேற்று காலை, மூஷிகவாகனத்தில் விநாயகர், வெள்ளியானை வாகனத்தில் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகா’ என பக்தியுடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து தனித்தனி விமானங்களில் 63 நாயன்மார்கள் மாட வீதியுலாவும் நடந்தது. அதனைத் தொடர்ந்து மாலையில் கோவிலில் சமய சொற்பொழிவும், கலையரங்கில பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
தொடர்ந்து இரவு வெள்ளித் தேரோட்டம் நடைபெற்ற. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் திரண்டிருந்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர்.
வெள்ளி விமானத்தில் விநாயகர், வெள்ளி ஆச்சி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், வெள்ளி தேரில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், வெள்ளி இந்திர விமானத்தில் பராசக்தி அம்மன், வெள்ளி விமானத்தில் சண்டிகேஸ்வரர் பவனி வந்தனர்.