திருவேற்காடு, அக். 28 –
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் ரூ. 69.98 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 4 புதிய வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பால் வளத்துறை அமைச்சர் ஆவடி ச. மு. நாசர் கலந்து கொண்டு மாணவர்கள் பயன்பாட்டிற்கு புதிய வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளி வளாகத்தில் கூடுதலாக வகுப்பறை மற்றும் சமுதாய நலக்கூடம் சுமார் 5 கோடி ரூபாயில் கட்டித் தர உள்ளதாகவும் அதற்கான பணி குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும், மிக விரைவில் கட்டுமானப்பணி நடைபெறுவதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், எம்.எல்.ஏ.கிருஷ்ணசாமி மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் நகரச் செயலாளர் என். இ. கே. முர்த்தி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தா தேவி, ஆதிதிராவிட நலப் பள்ளி தலைமை ஆசிரியர் கிருபாகரன், பொன்னுமணி மக்கள் நல சேவை மைய நிறுவனர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் இப்பள்ளியின் கட்டட அமைப்பு மற்றும் இதர வசதிகள் யாவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அமைக்கப் பட்டு, பள்ளி கட்டிடம் முழுவதும் ஓவியங்கள் மற்றும் மாணவருக்கு வேண்டிய படிப்பு சம்பந்தமான வாக்கியங்கள் எழுதப்பட்டும், பரந்த விளையாட்டு மைதானமும் அமைக்கப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.