கும்பகோணம், பிப். 7 –
கும்பகோணம் அருகே உள்ள கருவளர்சேரியில் உள்ள பழமையான சிவாலயமான அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கும்பகோணம் மற்றும் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான சைவ மற்றும் வைணவ கோயில்கள் மற்றும் நவக்கிரக ஸ்தலங்களும் உள்ளன. கரு உருவாவதற்கு ஒரு கோவில், உருவான கரு வளர்ந்து சுகப்பிரசவம் ஆவதற்கு ஒரு கோவில், பிறந்த குழந்தை நல்கல்வி அறிவுடன் வளர ஒரு கோவில், மனிதனின் இறுதி நாட்களில், துன்பமில்லாமல் உயிர் பிரிய ஒரு கோயில், என கருமுதல் மனிதனின் இறுதி காலம் வரையிலான ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ற வகையில் பல்வேறு கோயில்கள் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ளது.
அந்த வரிசையில் கரு உருவாவதற்குரிய கோயிலாக, கும்பகோணம் அருகேயுள்ள கருவளர்சேரியில் உள்ள பழமையான சிவாலயமான அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது, பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த 04ம் தேதி வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகள் சர்வசாதகம் திப்பிராஜபுரம் சுவாமிநாத சிவாச்சாரியார், கருவளர்சேரி சுப்பிரமணிய சிவாச்சாரியார், ஆகியோர் தலைமையில் உபசாதகம் கருவளர்சேரி விக்னேஷ் சிவாச்சாரியார் உள்ளிட்ட ஏராளமான வேத விர்பன்னர்கள் இணைந்து, யாகசாலை பிரவேசம், நவாக்கினி ஹோமம், திரவ்யாஹதி, பிம்மசுத்தி, ஆகியவற்றுடன் தொடங்கி இன்று காலை 6ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவில், மகா பூர்ணாஹதியும், மகா தீபாராதனையும் நடைபெற்ற பின், நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள், நந்தி வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் அதனை தொடர்ந்து, விமான கலசங்களுக்கும், சுவாமி, அம்பாள் கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்த பிறகு, ஓரே சமயத்தில் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்ற, மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.






















