திருவாரூர், மே. 08 –
திருவாரூரில் அவதரித்த கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான ஸ்ரீ தியாக பிரம்மம், ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர், ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் திருவாரூரில் நடைபெறுவது வழக்கம்.
அதன் தொடர்ச்சியாக இன்று ஸ்ரீ தியாக பிரம்மத்தின் 255 ஜெயந்தி விழா நடைபெறுகிறது. திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் புது தெருவில் அமைந்துள்ள தியாக பிரம்மம் அவதரித்த இல்லத்தில் சங்கீத வித்வான்கள் கலந்துக் கொண்டு தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி ஸ்ரீ தியாகபிரம்மத்திற்கு இசையினால் ஆராதனை செய்தனர்.
தொடர்ந்து நவாவரண பூஜை நடைபெற்று அனைவருக்கும் விதை தானம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து திருவாரூர் தனியார் மண்டபத்தில் இன்று மாலை வரை நடைபெற உள்ள ஆராதனை நிகழ்வில், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல மாநிலங்களிலிருந்தும் இசைக்கலைஞர்கள் தியாக பிரம்மத்திற்கு தியாகராஜரின் கீர்த்தனைகளைப் பாடி ஆராதனை செய்ய உள்ளார்கள்.



















