ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோலியப் பொருட்களைச் சேர்க்க பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கோரியுள்ளார். புது தில்லியில் இன்று செராவீக் ஆதரவில் நடத்தப்பட்ட மூன்றாவது இந்திய எரிசக்தி அமைப்பு கருத்தரங்கில் உரையாற்றிய அவர், இந்த விஷயத்தை ஜி.எஸ்.டி குழுமத்திற்கு மத்திய நிதியமைச்சர் எடுத்துச் செல்ல வேண்டு மென்று கேட்டுக் கொண்டார். குறைந்த பட்சம் இயற்கை எரிவாயு மற்றும் விமான எரிபொருளை ஜிஎஸ்டி-யில் இணைப்பதன் மூலம் தொடக்கத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டுமென்பது தொடர்ச்சியான கோரிக்கை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஏற்கனவே மூன்று சுற்று ஏல நடைமுறைகள் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப் பட்டிருப்பதால் எரிசக்தி மற்றும் பெட்ரோலியத் துறையில் 2023-க்குள் 58 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு கிடைக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளதாக அவர் கூறினார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் படி எரிவாயு அடிப் படையிலான பொருளாதாரத்தை மேம்படுத்தத் தனி முக்கியத்துவம் அளிக்கப் படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
உலக சராசரியை, குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு நாடுகளின் சராசரியை விட இந்தியாவில் தனிநபர் கார்பன் வெளியேற்றம் மிகவும் குறைவானது என்றாலும் இதை விடவும் குறைக்கும் பொருளாதாரத்திற்கு அரசு உறுதிபூண்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். உலகின் நிலையோடு ஒப்பிடும் போது இந்தியாவின் எரிபொருள் தரம் மிகச் சிறந்தது என்று குறிப்பிட்ட தர்மேந்திர பிரதான், பிஎஸ்6 வகை எரிபொருள் 2020 ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் கிடைக்கும் என்றார்.
இந்தக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஈர்ப்புள்ள இடமாக இந்தியா மாறிவருகிறது என்றார். அண்மையில் வெளியிடப் பட்ட பெரு நிறுவன வரிவிகிதங்கள் குறைப்புக்கான அறிவிப்புகள் பற்றி குறிப்பிட்ட அவர், முதலீட்டுக்கான சூழல் தற்போது சாதகமாக உள்ளது என்றார். நிறுவனங்கள் சட்டம், திவால் மற்றும் நொடித்துப் போதல் சட்ட விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப் பட்டிருப்பது பற்றியும் கூறிய அவர், தற்போது இணக்கத்தின் மீது கவனம் செலுத்தப்படுகிறது என்றார். எரிசக்தி துறைக்கு உயர் முன்னுரிமை என்பதற்கு உறுதி அளித்த நிர்மலா சீதாராமன், முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மதிக்கப்படும் என்பதை அரசு உத்தரவாதப்படுத்தும் என்றார். சிஓபி-21 இலக்குகளை எட்டுவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது என்றும், புதுப்பிக்கவல்ல எரிசக்தி வளங்களுக்கு ஊக்கமளிக்கப் படுவதாகவும் கூறினார். நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமையல் எரிவாயு, மின்சாரம் கிடைப்பதற்கான அரசின் முயற்சிகளைப் பாராட்டிய நிர்மலா சீதாராமன், பெருமளவு மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த முயற்சிகளை இயக்கமாக அரசு நடத்தி வருகிறது என்றார்.
‘புதிய இந்தியாவின் எரிசக்தி@75: எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நீடிக்கும் தன்மையில் சமநிலை பராமரிப்பு’ என்பது இந்தக் கருத்தரங்கின் மையப் பொருளாகும். இந்த 3 நாள் கருத்தரங்கில் 15 நாடுகள் மற்றும் 300 நிறுவனங்களிலிருந்து 1200 பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.