தஞ்சாவூர், ஏப். 27 –
தஞ்சாவூர் – பூதலூர் சாலையில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது. இதில் அப்பர் படம் வைத்து இழுத்து வரப்பட்டது.
தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பிய போது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியது.
இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இவர்களில் களிமேடு கிராமத்தைச் சேர்ந்த மோகன் (முன்னாள் ராணுவ வீரர்), பிரதாப் (36), அன்பழகன் (60), இவரது மகன் ராகவன் (24), நாகராஜ் (60), சந்தோஷ் (15), செல்வம் (56), ராஜ்குமார் (14), சாமிநாதன் (56), கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் பலத்த காயமடைந்த ரவிச்சந்திரன் (48), கலியமூர்த்தி (40), ஹரிஷ் ராம் (10), நித்தீஷ் ராம் (13), மாதவன் (22), மோகன் (54), விஜய் (23), அரசு (19), விக்கி (21), திருஞானம் (36), ஹரிஷ் (11), மதன் மனைவி சுகுந்தா (33), கௌசிக் (13), பரணி (13) ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பரணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து களிமேடு கிராமத்திற்கு சென்று இடத்தை பார்வையிட்டார்.
இதேபோல மத்திய மண்டல போலீஸ் ஐஜி பாலகிருஷ்ணன், தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் கயல்விழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது தொடர்பாக கள்ள பெரம்பூர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
மேலும் இந்த விபத்து நடைபெற்ற இடத்திற்கு இன்று முதலமைச்சர் நேரில் சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும், காயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களைச் சந்திக்கவும் இருப்பதாக இன்று நடைப்பெற்ற சட்மன்ற கூட்டத்தில் தெரிவித்திருந்த முதலமைச்சர் ஏற்கனவே தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த 11 பேர்களின் பூதவுடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி விட்டு பின்பு அம்மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 16 பேர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு அளித்தார். அதன் தொடர்ச்சியாக இவ்விபத்து நடந்து இடத்திற்கு சென்று விபத்துக் குறித்தும் அதனால் விளைந்த பாதிப்புக்குறித்தும் காவல் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் தேர் நிலைக்கு வருவதற்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தேர் வரும் வழியில் தண்ணீர் ஊற்றப்பட்டு வந்ததால் மின்சாரம் பாய்ந்த போது பாதிப்பு அதிகமாகி விட்டது என தெரிவித்தனர்.




















