திருவண்ணாமலை மார்ச்.17-
பொருட்களின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை பொதுமக்கள் கவனமாக பார்த்து வாங்க வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த நுகர்வோர் பாதுகாப்பு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டாரவிதேஜா முன்னிலை வகிக்க மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கோ.கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். விழாவுக்கு தலைமையேற்று மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே நுகர்வோர். உரிமைகள், கல்வி மற்றும் விழிப்புணர்வு பெறும்வகையில் பல்வேறு தலைப்புகளை மையமாக கொண்டு நடைபெற்ற ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளின். மூலம் ஒவ்வொரு தலைப்பின்கீழ் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிப் பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் கல்வி போன்ற பணிகள் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 30 பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்கள் மற்றும் 35 கல்லூரிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும். தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா என இருபெரும் விழாக்கள் அரசின் சார்பில் இம்மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. தன்னார்வ நுகர்வோர் ஆர்வலர்களைக் கொண்டு இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஒரு நடமாடும். ஊர்தி மூலம் சென்று நுகர்வோர் விழிப்புணர்வினை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் அவ்வப்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களை கவரும் விதத்தில் வெளியிடப்படும் விளம்பரங்களைப் பார்த்து ஏமாறாதவகையில் அவைகளில் உள்ள கலப்படங்கள், அவற்றை உபயோகிப்பதால் ஏற்படும் நன்மை தீமைகளை அவர்களை அறியும் வண்ணம் செய்ய வேண்டும். பொதுமக்கள் தாம் வாங்கும் பொருட்களின் அதிகபட்ச விலைகளையும், தயாரிப்பு நாள் மற்றும் காலாவதியாகும் நாட்களை பார்த்து வாங்கவும், எடை அளவுகளை சரிபார்த்தும், வாங்கும். பொருட்களுக்கு ரசீதும் கேட்டு வாங்க வேண்டும் எனத் தெளிவுபடுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் தத்தமது பள்ளி கல்லூரிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களில் சேர்ந்து அதன் பயன்களை தெரிந்து கொள்வதோடு பொது மக்களுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காக நுகர்வோரின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமான சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலம் பல்வேறு தலைப்புகளின் கீழ் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை விளக்கி மாதந்தோறும் “நுகர்வோர் கவசம்” என்ற மாத இதழ் வெளியிடப்பட்டு வருகின்றது.
எனவே, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் “நுகர்வோர் கவசம்” மாத இதழைப் வாங்கிப்படித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். முன்னதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்புத் தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவில் அமைக்கப்பட்டிருந்து நுகர்வோர்கான விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் பொ.நடராஜன், உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாகத் துறை அலுவலர் ராமகிருஷ்ணன், துணைப்பதிவாளர் எஸ்.ஆரோகியராஜ், திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சமூக சேவை சங்க தலைவர் கே.எம். சுவாமிநாதன், திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சமூக சேவை சங்க முன்னால் தலைவர் அன்பு எத்திராஜீலு, மாநில செயலாளர், எக்ஸ்னோரா மற்றும் மாவட்ட ரெட்கிராஸ் சௌரவ செயலாளர் ப. இந்திராஜன், திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் எம். வெங்கடேசன், அருட்பிரகாச வள்ளாலர் நுகர்வோர் பாதுகாப்பு உரிமை சங்க தலைவர் ஆனைவாடி ஆ. வெங்கடேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் நேர்முக உதவியாளர் கே.தனசேகரன், வட்ட வழங்கல் அலுவலர் ஜெகதீசன், மற்றும் அரசு அலுவலர்கள் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் நுகர்வோர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பெ.சதீஷ் நன்றி கூறினார்.

















