வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் மீது இடி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம், நவ. 01 –
கும்பகோணம் அருகே துக்காச்சி ஊராட்சியில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மதியம் துக்காச்சி ஏரி சத்திரம் பகுதியில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சுப்பிரமணியன் மனைவி ராதிகா வயது 35 மீது இடி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து நாச்சியார் கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராதிகாவின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகை முன்பு இடி தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.