புதுக்கோட்டை, நவ. 12 –
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆற்றல்மிக்க தோழர் டி.என். தமிழார்வன் சமூக விரோதிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடும் செயலை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி அதிகபட்சத் தண்டனைப் பெற்றுத்தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் ஒன்றிய துணைச் செயலாளர் ஆனந்த் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் கே.ஆர்.தர்மராஜன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.சி.சோமையா, ஒன்றிய செயலாளர் என்.விஜயரங்கன், ஒன்றிய துணைச் செயலாளர் ஏ.நாகராஜ், ஒன்றிய பொருளாளர் பேரூராட்சி கவுன்சிலர் எம்.மீராமொய்தீன், நகர செயலாளர் எம்.முகமதுரிசா, இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் ஜாபர்அலி, என்.ஏ அப்துல்ரகுமான், மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.
குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். நகரங்களை கடந்து கிராமங்கள் வரை கஞ்சா போதைப் பொருள் விற்பனை நடைபெறுகிறது. காவல்துறை முனைப்போடு செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்..