சென்னை, அக். 11 –
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் கடந்த செப் 15 -2021 அன்று 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு கடந்த அக் – 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரு கட்டமாக தேர்தல் அமைதியாக நடைப்பெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளைக் காலை 8 மணிக்கு 74 வாக்கு எண்ணும் மையங்களில் நடைப்பெறவுள்ளது.
இந்த வாக்கு எண்ணும் பணிக்கு 31, 245 வாக்கு எண்ணுகை அலுவலர்களும், பாதுகாப்புப் பணிக்கு காவல்துறையைச் சார்ந்த 6228 அலுவலர்கள் காவலர்கள் ஈடுபடவுள்ளனர்.
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையிலிருந்து (Strong Room) வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகளை, வாக்குச்சீட்டுக்களை வகைப்படுத்தி பிரிக்கும் அறைக்கு கொண்டு சென்று அவைகளை வகைப்படுத்தி பிரித்த பின்னர் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லும் வரையிலான நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவுச் செய்யப்படும்.
மேலும் வாக்கு எண்ணிக்கை அறைகளில் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படும்.
வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர், வாக்கு எண்ணுகை முகவர்களைத் தவிர்த்து பொதுமக்கள் யாரும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதி இல்லை, வாக்கு எண்ணும் மையங்களுக்குள் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர் , வாக்கு எண்ணுகை முகவர் மற்றும் தேர்தல் பணியில் ஈடுப் படுத்தப்படும் வாக்கு எண்ணுகை அலுவலர்கள் யாரும் கைப் பேசிகளை கொண்டு செல்ல அனுமதிக் கிடையாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கையில் கலந்துக் கொள்வதற்கு ஏதுவாக அடையாள அட்டைகள் { பதவிகள் வாரியாக ) தேர்தல் ஆணையத்தால் வழங்கப் பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை முடிவினை நாளைக் காலை 8 மணிக்கு மேல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரியில் https://tnsec.tn.nic.in ல் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.