திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு ஐயப்ப பக்தர்களிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளும் கேரளாவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சபரிமலை கோவில் நடைதிறப்பின்போது, சபரிமலை செல்லும் இளம்பெண்களையும் அவர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

அதே சமயம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தும் விதமாக போலீஸ் பாதுகாப்புடன் பிந்து, கனகதுர்க்கா ஆகிய 2 பெண்களை சாமி தரிசனம் செய்ய கேரள மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. இதுபோன்ற காரணங்களால் சபரிமலை கோவில் நடை திறக்கும் போதெல்லாம் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வருகிற 17-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். மாசி மாத பூஜையின் போதும், சபரிமலைக்கு இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர வாய்ப்புள்ளதால் சபரிமலையில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

கடந்த காலங்களில் சபரிமலை கோவில் நடை திறந்திருந்தபோது 144 தடை உத்தரவு சபரிமலையில் பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனவே தற்போதும் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் இன்று முதல் 17-ந்தேதி வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று போலீஸ் சார்பில் பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதனால் சபரிமலையில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here