திருவண்ணாமலை, செப். 22-

தமிழகத்தில் 10 ஆயிரம் கி.மீ. அளவிற்கு கிராம சாலைகள் தரம் உயர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு சாலைகள் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என திருவண்ணாமலையில் நேற்று நடந்த நெடுஞ்சாலை துறை தி.மலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட அலுவலக துவக்கவிழாவில் தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வேலு கூறினார்.

திருவண்ணாமலை திண்டிவனம் சாலை நெடுஞ்சாலை துறை வளாகத்தில் நெடுஞ்சாலை துறை திருவண்ணாமலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட அலுவலக துவக்க விழா நேற்று நடந்தது.

 இந்த விழாவுக்கு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் தலைமை தாங்கினார். தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகிக்க, கண்காணிப்பு பொறியாளர் பி.செந்தில் அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நெடுஞ்சாலை துறை திருவண்ணாமலை கட்டுமானம் மற்றும் பராமிப்பு வட்ட அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந் நிகழ்ச்சியில் அவர் பேருரையாற்றுகையில்
தமிழகத்தில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் கிராம சாலைகள் தரம் உயர்த்த தமிழக முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு நெடுஞ்சாலை துறை சாலைகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

திருவண்ணாமலை – கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நெடுஞ்சாலை துறை திருவண்ணாமலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்திற்குட்பட்ட 11 நகரங்களில் புற வழிச்சாலைகள் அமைக்கப் படவுள்ளது. திருவண்ணாமலை நகரில் அவலூர் பேட்டை மற்றும் வேட்டவலம் ஆகிய சாலைகளில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். திருவண்ணாமலையில் 10 ஏக்கரில் விரைவில் புதிய பேருந்து நிலையம் அமையவுள்ளது. முதல்வரின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் வகையில் திருவண்ணாமலை அருள் மிகு அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகள் கான்கிரீட் சாலைகளாக மாற்றப்படும் என்றார்.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ்,  நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார்,  பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குநர் பி.ஆர்.குமார், தலைமை பொறியாளர் ஆர்.சந்திரசேகர், திருவண்ணாமலை வட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி, திருவண்ணாமலை உதவி கோட்டப் பொறியாளர் கே.ரகுராமன், உதவி கோட்டப் பொறியாளர்கள் செங்கம் ஆர்.நாராயணன், போளுர் வி.கோவிந்தசாமி, தண்டராம்பட்டு கே.தியாகு, கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், தாசில்தார் எஸ்.சுரேஷ், மற்றும் நெடுஞ்சாலை துறை உயர்அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். விழாவினை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் தொகுத்து வழங்கினார். முடிவில் திருவண்ணாமலை நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் க.முரளி நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here