திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மை தடுப்புச் சட்டத்தின் கீழ், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ந்தேதி காலை 6 மணிவரை நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கவும், பொது மக்கள் நலன் கருதியும் தற்போது அரசு உத்தரவின்படி விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளான வரும் 10ந்தேதி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடப்படுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ தடை செய்யப்படுகிறது.
தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது. அனுமதி தனிநபர்களுக்கு மட்டும் பொருந்தும். எந்தவிதமான அமைப்புகளும் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடைசெய்யப்படுகிறது.
எனவே, பொது மக்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலிலேயே பாதுகாப்பான முறையில் கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இல்லங்களில் வைத்து வழிபாடு செய்த சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ சுற்றுப்புறத்திலோ வைக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும், பண்டிகை தொடர்பான பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்கு செல்லும் பொதுமக்கள் தவறாது முகக்கவசம் அணிவதோடு, அவ்விடங்களில் பொருட்கள் வாங்க நிற்கும்போதும் சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. அரசின் இந்நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.