திருவாரூர், பிப். 16 –
திருவாரூர் அருகே பெருந்தரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கடபங்குடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நூற்றுக் கணக்கான குடும்பங்கள் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.
மேலும், இவ்வூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வரும் திமுகவை சேர்ந்த மதிவாணன் இக்கிராம மக்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி முதலான எந்தவொரு அத்தியாவசிய அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றாமல் அரசியல் உள்நோக்கத்தோடு புறக்கணித்து வருவதாக அவ்வூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இக் கிராமத்தை பொறுத்தவரை இருந்தாலும் கஷ்டம், இறந்தாலும் கஷ்டம் என்ற நிலையிலேயே தினசரி பல்வேறு கஷ்டத்தை அனுபவித்து இப்பகுதியில் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கும் போது, இக்கிராமத்தில் யாரேனும் உயிரழந்தால் அவர்களது உடலை அடக்கம் செய்ய மழைக்காலமாக இருந்தாலும், கோடைகாலமாக இருந்தாலும் பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெய்த மழை நீர் குளிக்கரை எனும் இரயில்வே கீழ்பாலத்தில் மழைநீர் அகற்றப்படாமல் இன்று வரை தேங்கி கிடப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இன்று கடபங்குடி கிராமத்தில் உயிரழந்த ஒருவரின் சடலத்தை இத்தகைய சாக்கடை போன்று தேங்கிகிடக்கும் நீரிலும், கரடு முரடாக இருந்து வரும் பாதையில் சடலத்தை மிகுந்த சிரமத்துடனேயே தூக்கி மயானத்திற்கு சென்றதாகவும் மேலும் தொடர்ந்து பல்வேறு புகார்களை அவ்வூராட்சி பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மோசமான நிலையில் உள்ள இச்சாலையினை கடந்துச் செல்ல முடியாத நிலையினை உயிரழந்தவரின் வயதான உறவினர்கள், மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் இவ் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக கூறினார்கள்.
ஆதலால் இவ்விசயத்தில் அரசு அரசியல் பாகுபாடின்றி உடனடியாக சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அக்கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் உடனடி நடவடிக்கையை மேற் கொள்ளாவிடில் தங்களது ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார்கார்டு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அக்கிராம மக்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி: பெருந்தரக்குடி ஊராட்சி 1வது வார்டு உறுப்பினர் சதிஷ் பேட்டி.
























