இஸ்ரோ தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் சந்திரயான்-2 தொடர்பை இழந்தபோதும் பெங்களுருவில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சந்திரயான்-2 தரையிறங்குவதை பார்த்துக் கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி “நமது விஞ்ஞானிகள் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது! அவர்கள் தங்களால் இயன்ற சிறப்பான பணியை மேற் கொண்டிருக் கிறார்கள். எப்போதும் இந்தியாவுக்குப் பெருமை தந்து கொண்டிருக் கிறார்கள். இந்தத் தருணங்கள் துணிவோடு இருக்க வேண்டியவை, துணிவோடு நாம் இருப்போம்!” என்றார்.
தனிப்பட்ட முறையில் விஞ்ஞானிகளின் மன உறுதியை அதிகப் படுத்தும் முயற்சியாக “இந்த நாடு உங்களோடு இருக்கிறது, நான் உங்களோடு இருக்கிறேன். முயற்சி மிகவும் மதிப்பு வாய்ந்தது. அதனால்தான் இந்தப் பயணம் மேற் கொள்ளப் பட்டுள்ளது” என்று பிரதமர் கூறினார்.
“அன்னை இந்தியாவின் வெற்றிக்குப் பாடுபடும் நீங்கள், அதற்காக பெரும் முயற்சி செய்கிறீர்கள், அன்னைக்குப் பெருமிதத்தை ஏற்படுத்த அர்ப்பணிப் போடு செயல் படுகிறீர்கள்”.
“நேற்றிரவு உங்களின் உணர்வுகளையும், வருத்தத்தையும் என்னால் உணர முடிந்தது. விண்கலத்திலிருந்து தகவல் தொடர்பு கிடைக்காத போது, உங்களோடு நான் இருந்தேன், விடை கிடைக்காத பல கேள்விகள் உள்ளன. ஆனால், நீங்கள் விடைகளைக் கண்டறிவீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்தப் பணிக்குப் பின்னால் கடுமையான உழைப்பு இருப்பதை நான் அறிவேன்”.
“நமது பயணத்தில் சிறிய பின்னடைவை நாம் சந்தித்துயிருக்கலாம், ஆனால் இலக்குகளை எட்டுவதற்கான நமது கடும் முயற்சியை இது சீர்குலைத்து விடாது”.
நமது உறுதி இப்போது வலுப்பட்டுள்ளது.
“நமது விஞ்ஞான சகோதரிகள்-சகோதரர்களுடன் ஒட்டுமொத்த தேசமே நேற்றிரவு விழித்திருந்தது. நிலவின் மேற்பகுதிக்கு மிகவும் நெருக்கமாக நாம் வந்து விட்டோம். அந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது”.
“நமது விண்வெளித் திட்டம் மற்றும் விஞ்ஞானிகள் குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம். அவர்களின் கடுமையான உழைப்பும், மனஉறுதியும் நமது மக்களுக்கு மட்டுமின்றி, மற்றநாடுகளுக்கும் சிறந்த வாழ்க்கையை உறுதி செய்கிறது. சிறந்த சுகாதாரம், கல்வி உள்ளிட்ட தரமான வாழ்க்கையை ஏராளமான மக்கள் பெற்றிருப்பது இவர்களின் புதுமை முயற்சிகளின் விளைவாகும்”.
“மகிழ்ச்சி அடைவதற்கான மேலும் பல பெருமைமிகு தருணங்கள் இருக்கும் என்பதை இந்தியா அறிந்துள்ளது”.
“விண்வெளித் திட்டத்தை பொறுத்தவரை சிறந்த தருணங்கள் இன்னும் வரவிருக்கின்றன”.
“கண்டறிவதற்கான பல புதிய விஷயங்களும், செல்வதற்கான புதிய இடங்களும் இருக்கின்றன. அதற்கான தருணங்களை நாம் உருவாக்குவோம். வெற்றியின் புதிய உச்சங்களைத் தொடுவோம்”.
“நமது விஞ்ஞானிகளுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, இந்தியா உங்களுடன் இருக்கிறது. உங்களின் உண்மையான செயல்பாடு மூலம் இதற்கு முன் எவரும் சென்றிராத இடத்திற்கு நீங்கள் சென்றிருக்கிறீர்கள்”.
“உங்களால் முடிந்தவரை நெருக்கமாக சென்றிருக்கிறீர்கள். இதற்கான முயற்சி மிகவும் மதிப்புக்குரியது. அதற்கேற்ப பயணம் இருந்தது. நமது குழு கடுமையாக உழைத்து நீண்டதூரம் பயணம் செய்துள்ளது. இதற்கான அனுபவங்கள் நம்மோடு எப்போதும் இருக்கும்”.
“இன்று கற்றுக்கொள்வது, நாளை நமக்கு வலுவையும், சிறப்பையும் தருவதாக இருக்கும்”.
“நமது விண்வெளி விஞ்ஞானிகளின் குடும்பங்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். நமது முயற்சியில் அவர்களின் அமைதியான ஆனால் மதிப்புமிக்க ஆதரவு, மாபெரும் பலமாக விளங்குகிறது”.
“சகோதர-சகோதரிகளே, இந்தியப் பண்பாட்டின் மையம் என்பது விடா முயற்சியும், உழைப்பும் ஆகும். புகழ்மிக்க நமது வரலாற்றில் நாம் நசுக்கப்படுகின்ற பல தருணங்களை எதிர்கொண்டிருக்கிறோம். ஆனால், ஒருபோதும் தோல்வி அடைந்ததில்லை. நமது நாகரீகம் நிலைத்து நிற்பதற்கு இதுதான் காரணம்”.
“நாம் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளைப் படைத்திருக்கிறோம். இஸ்ரோவையும் தோல்விகள் துவளச் செய்து விடாது என்பதை நான் அறிவேன்”.
“புதிய விடியல் தோன்றும், எதிர்காலம் சிறப்பாக இருக்கும், விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் முன்னேறுவோம், அதுதான் நமது வரலாறு”.
உங்கள் மீது நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன், என்னுடையதை விட உங்களின் கனவுகள் உயர்வானவை. உங்களின் முயற்சிகள் மீது நான் முழுமையான நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
உங்களிடம் இருந்து உத்வேகம் பெற உங்களை நான் சந்தித்தேன். நீங்கள் உத்வேகத்தின் கடலாக இருக்கிறீர்கள். உத்வேகத்தின் சான்றாகவும் வாழ்கிறீர்கள்.
உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். உங்களின் முயற்சிகளில் வெற்றிபெறவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.